கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டி மழை.. உற்சாகத்தில் குழந்தைகள், குளிர்ச்சியில் மக்கள்!
கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆலங்கட்டியுடன் பலத்த மழை பெய்தது. வெயிலின் தாக்கம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மாலை பெய்த பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை சுமார் 4 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழையுடன் ஆலங்கட்டிகளும் விழுந்ததால் அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர்.
குறிப்பாக கிருஷ்ணகிரி நகரம் மற்றும் கந்திகுப்பம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பதிவானது. சாலைகள் மற்றும் திறந்த வெளிப்பகுதிகளில் குவிந்திருந்த ஆலங்கட்டிகளை சிறுவர்கள் சேகரித்து விளையாடி மகிழ்ந்தனர்.
திடீரென பெய்த மழையால் கடந்த சில நாட்களாக வாட்டி வந்த கடும் வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் குளுமையான சூழல் நிலவுகிறது.
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைத்ததால் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இருப்பினும், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சில பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்தை மீண்டும் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஆலங்கட்டி மழையுடன் பெய்த இந்த திடீர் மழை மாவட்ட மக்களுக்கு வெப்பத்திலிருந்து பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
Prasanth Subramani