டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியாவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து
மகளிர் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. ரிச்சா கோஷ் அதிரடி அரைசதம் அடித்தும் இந்தியாவால் வெற்றியைப் பெற முடியவில்லை.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வியை சந்தித்தது. கார்டிஃபில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 12ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அணிகள் தங்களது தயாரிப்பை சோதிக்கும் வகையில் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் எமி ஜோன்ஸ் சிறப்பாக விளையாடி 64 ரன்கள் எடுத்தார். கேப்டன் நாட் ஷிவர்-பிரண்ட் 57 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். டேனியல் கிப்சன் 30 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஸ்ரேயங்கா பாட்டில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷஃபாலி வர்மா, ரேணுகா சிங், ஸ்ரீ சரணி மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி வெற்றிக்காக போராடினார். அவர் 36 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் இடம்பெற்றன.
ரிச்சா கோஷுக்கு அடுத்தபடியாக பார்தி ஃபுல்மாலி 18 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 17 ரன்களும், யஷ்திகா பாட்டியா 15 ரன்களும் எடுத்தனர். எனினும் மற்ற வீராங்கனைகள் பெரிய அளவில் பங்களிக்கத் தவறியதால் இந்திய அணி 19.5 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லின்ஸி ஸ்மித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். சார்லோட் டீன், டில்லி கார்ட்டீன் கோல்மேன் மற்றும் டேனியல் கிப்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை தடுத்தனர்.
இறுதிவரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியை நெருங்கிய போதிலும், 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் ரிச்சா கோஷின் அதிரடி அரைசதம் மற்றும் போராட்டமான ஆட்டம் இந்திய அணிக்கு உலகக் கோப்பை தொடருக்கு முன் நம்பிக்கையை அளித்துள்ளது.
Prasanth Subramani