ஆசிய கோப்பை யு-18 ஹாக்கி: அரையிறுதியில் சீனாவுடன் இந்திய மகளிர், பாகிஸ்தானுடன் இந்திய ஆடவர் அணி மோதல்
ஆசியக் கோப்பை யு-18 ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்திய மகளிர் அணி சீனாவையும், இந்திய ஆடவர் அணி பாகிஸ்தானையும் எதிர்கொள்ள உள்ளது. இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தால் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஜப்பானின் ககாமிகஹரா நகரில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை யு-18 ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது அரையிறுதிப் போட்டிகளில் இந்திய மகளிர் அணி சீனாவையும், இந்திய ஆடவர் அணி பாரம்பரிய எதிரியான பாகிஸ்தானையும் எதிர்கொள்ள உள்ளது.
இந்திய மகளிர் அணி குரூப் ஏ பிரிவில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சிங்கப்பூருக்கு எதிரான போட்டியில் 25-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் மலேசியா மற்றும் கொரியா அணிகளையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. அணியின் முன்னணி வீராங்கனையான நௌஷின் இதுவரை 10 கோல்களை அடித்து அதிக கோல்கள் அடித்த வீராங்கனைகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்ற சீனாவை இந்திய மகளிர் அணி அரையிறுதியில் சந்திக்கிறது.
மறுபுறம், இந்திய ஆடவர் அணி குரூப் ஏ பிரிவில் 3 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அணியின் கேப்டன் குஷ்வாஹா இதுவரை 7 கோல்களை அடித்து சிறப்பான பார்மில் உள்ளார். குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்துள்ள பாகிஸ்தான் அணியுடன் இந்திய ஆடவர் அணி அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி மோதல் எப்போதும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதேபோல், இந்திய மகளிர் அணியும் சீனாவுக்கு எதிராக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைய உறுதியாக உள்ளது. இரு இந்திய அணிகளும் கோப்பையை வெல்லும் இலக்குடன் அரையிறுதியில் களமிறங்குகின்றன.
Prasanth Subramani