பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம்.. டெஸ்ட் தொடரில் வரலாற்று சாதனை!
சில்ஹெட்டில் நடைபெற்ற 2வது டெஸ்டில் பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேசம், 2-0 என டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
சில்ஹெட்டில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய வங்கதேச அணி, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
437 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி இறுதி நாளில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, போராடிய போதிலும் 358 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது ரிஸ்வான், ஷான் மசூத் மற்றும் சல்மான் ஆகா ஆகியோர் சிறப்பாக விளையாடினாலும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக சுழற்பந்து வீச்சாளர் தைஜுல் இஸ்லாம் திகழ்ந்தார். அவர் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தானின் பேட்டிங் வரிசையை சிதறடித்தார்.
இந்த போட்டியில் வங்கதேச அணி இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் லிட்டன் தாஸ் சதம் விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸில் மூத்த வீரர் முஷ்பிகுர் ரஹீம் 137 ரன்கள் குவித்து அணிக்கு வலுவான முன்னிலை பெற்றுத்தந்தார்.
மேலும், இந்தப் போட்டியின் போது முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச கிரிக்கெட்டில் 16,000 ரன்கள் கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்த சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது. அதோடு, 2024ஆம் ஆண்டு பாகிஸ்தானில் 2-0 என தொடரை வென்ற பிறகு, தொடர்ந்து இரண்டாவது முறையாக பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியுள்ளது.
இந்த வரலாற்று வெற்றி மூலம் வங்கதேச அணி ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. மறுபுறம், வெளிநாட்டு மண்ணில் மீண்டும் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணிக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Prasanth Subramani