உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு அதிர்ச்சி: மானிய எரிவாயு சிலிண்டர்கள் ஆண்டுக்கு 4 ஆக குறைப்பு
உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 9-இலிருந்து 4 ஆக குறைத்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படலாம்.
பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு மேலும் குறைத்துள்ளது. இதன்படி, ஆண்டுக்கு வழங்கப்பட்டு வந்த 9 மானிய சிலிண்டர்கள் தற்போது 4 ஆக குறைக்கப்பட்டுள்ளன.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்கள் விறகு அடுப்பிலிருந்து எரிவாயு அடுப்புக்கு மாறுவதை ஊக்குவிக்கும் நோக்கில், 2016ஆம் ஆண்டு பிரதமர் உஜ்வாலா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வைப்புத் தொகை இல்லாமல் எரிவாயு இணைப்பு மற்றும் இலவச எரிவாயு அடுப்பு வழங்கப்பட்டது.
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில், பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 மானிய விலையிலான 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்டன. பின்னர் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 9 ஆக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் குறைக்கப்பட்டு ஆண்டுக்கு 4 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான மானியத் தொகை ரூ.200-இலிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பது பல குடும்பங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாற்றம் குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனூஜா விளக்கம் அளித்துள்ளார். உஜ்வாலா திட்ட பயனாளிகளின் சராசரி ஆண்டு எரிவாயு நுகர்வு அளவை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருகின்றன. இதன் தாக்கமாக, கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலை மாற்றத்தின்படி, சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.928.50-இலிருந்து ரூ.957.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், டெல்லியில் ரூ.913-இலிருந்து ரூ.942 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைப்பு மற்றும் எரிவாயு விலை உயர்வு ஆகிய இரண்டும் இணைந்து உஜ்வாலா திட்ட பயனாளிகளின் குடும்பச் செலவில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Prasanth Subramani