செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைனின் மிகப்பெரிய டிரோன் தாக்குதல்: வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ரஷியா எச்சரிக்கை
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் மீது உக்ரைன் மேற்கொண்ட பெரியளவிலான டிரோன் தாக்குதலுக்கு பிறகு, பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ரஷியா எச்சரித்துள்ளது. 141 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது உக்ரைன் மேற்கொண்டதாகக் கூறப்படும் பெரியளவிலான டிரோன் தாக்குதல்கள் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தாக்குதல்களைத் தொடர்ந்து, பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என ரஷிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக இணைய சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ரஷியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரஷிய அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் மட்டும் 141 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கடந்த ஒரே நாளில் உக்ரைன் ஏவியதாகக் கூறப்படும் மொத்தம் 376 டிரோன்களை ரஷிய பாதுகாப்புத் துறை அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் மோதலுக்கு தீர்வு காணும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்திருந்தது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, 2022 ஆம் ஆண்டு ரஷியா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நேரடியாக கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் புதினின் நீண்டகால ஆட்சியை விமர்சித்ததோடு, அவரது வயதையும் கேலி செய்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், அந்த பேச்சுவார்த்தை அழைப்பை புதின் ஜூன் 6 அன்று நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் இந்த டிரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ரஷியா-உக்ரைன் மோதல் ரஷியாவின் அன்றாட வாழ்க்கையை பெரிதாக பாதிக்கவில்லை என்ற தோற்றம் சர்வதேச அளவில் இருந்த நிலையில், தற்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மீது நடத்தப்பட்ட தாக்குதல் புதினுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், புதின் ஆண்டுதோறும் நடத்தும் ‘சர்வதேச பொருளாதார மன்றம்’ தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நகரின் எண்ணெய் முனையம் மற்றும் கப்பல் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது சம்பவத்தின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் தரப்பும் ரஷியா நடத்திய டிரோன் தாக்குதல்களுக்கு எதிராக பதிலடி கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. ரஷியா ஏவிய 272 டிரோன்களில் 249 டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷியா-உக்ரைன் மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Prasanth Subramani