இன்னும் நீளமாகும் ஜி.டி.நாயுடு மேம்பாலம்.. கோவையில் ₹800 கோடி மதிப்பில் புதிய விரிவாக்கம்!
கோயம்புத்தூரின் அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம், சின்னியம்பாளையம் முதல் நீலம்பூர் வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஜி.டி.நாயுடு மேம்பாலம் மேலும் நீட்டிக்கப்பட உள்ளது. அவிநாசி சாலையில் அமைந்துள்ள இந்த மேம்பாலத்தை சின்னியம்பாளையம் முதல் நீலம்பூர் வரை விரிவுபடுத்துவதற்கான முக்கிய முன்னேற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு தடையில்லா சான்றிதழ் (No Objection Certificate) வழங்கியுள்ளது. இதன் மூலம் திட்டப்பணிகளை விரைவாக முன்னெடுக்க வழி அமைந்துள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் நீட்டிக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கப் பணிகளுக்காக சுமார் ₹700 முதல் ₹800 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவிநாசி சாலை கோயம்புத்தூரின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகும். குறிப்பாக சின்னியம்பாளையம், ஹோப் காலேஜ், விமான நிலையம் மற்றும் நீலம்பூர் பகுதிகளில் அதிகளவிலான வாகன நெரிசல் தினமும் ஏற்பட்டு வருகிறது. இந்த மேம்பால நீட்டிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டால், போக்குவரத்து சீராகும் என்பதுடன் பயண நேரமும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கோயம்புத்தூரின் வளர்ந்து வரும் நகர்ப்புற போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Prasanth Subramani