உலக சாம்பியனை வீழ்த்தி வரலாறு படைத்த இந்திய வீராங்கனை.. நார்வே செஸ்ஸில் திவ்யா தேஷ்முக் அசத்தல்!
நார்வே செஸ் தொடரில் உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை இந்தியாவின் திவ்யா தேஷ்முக் வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
உலகின் மிக முக்கியமான செஸ் தொடர்களில் ஒன்றாகக் கருதப்படும் நார்வே செஸ் தொடரில், இந்தியாவின் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக் உலக சாம்பியனை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
உலகின் முன்னணி செஸ் வீரர்கள் பங்கேற்கும் நார்வே செஸ் தொடர், “செஸ் உலகின் விம்பிள்டன்” என அழைக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான தொடர் மே 25 அன்று தொடங்கி ஜூன் 10 வரை நடைபெறுகிறது.
இந்த தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 6 வீரர்கள் என மொத்தம் 12 பேர் பங்கேற்றுள்ளனர். இந்தியாவிலிருந்து குகேஷ், பிரக்யானந்தா, கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
20 வயதான திவ்யா தேஷ்முக், நார்வே செஸ் தொடரில் முதல்முறையாக பங்கேற்கிறார். தொடரின் முதல் போட்டியில் சீனாவின் உலக சாம்பியனான ஜூ வென்ஜூனுடன் டிரா செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில், கருப்பு காய்களுடன் அழுத்தமான சூழலில் விளையாடிய திவ்யா, ஜூ வென்ஜூனை தோற்கடித்து உலக செஸ் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நார்வே செஸ் தொடரில் திவ்யா பதிவு செய்துள்ள முதல் வெற்றி இதுவாகும். அதுவும் உலக சாம்பியனை எதிர்த்து கிடைத்திருப்பதால் இந்த வெற்றி மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஆண்கள் பிரிவில் இந்திய வீரர்கள் குகேஷ் மற்றும் பிரக்யானந்தா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அமெரிக்க வீரர் வெஸ்லி சோவுடன் விளையாடிய பிரக்யானந்தா மற்றும் ஜெர்மனியின் வின்செண்ட் கெய்மருடன் விளையாடிய குகேஷ் முதல் சுற்றில் டிரா செய்திருந்த நிலையில், அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளனர்.
மற்றொரு இந்திய வீராங்கனையான கோனேரு ஹம்பி தனது முதல் போட்டியில் கஜகஸ்தானின் பிபிசரா அசுபாயேவாவிடம் தோல்வியடைந்தார்.
இதற்கிடையில், உலக செஸ் ஜாம்பவானான மாக்னஸ் கார்ல்சன், ஈரான்-பிரான்ஸ் வீரர் அலிரெஸா ஃபிரோஜாவிடம் தோல்வியடைந்ததும் இந்த தொடரின் மற்றொரு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.
பல திருப்புமுனைகளுடன் நடைபெற்று வரும் இந்த தொடரில், தனது முதல் நார்வே செஸ் தொடரிலேயே உலக சாம்பியனை வீழ்த்திய திவ்யா தேஷ்முக் தற்போது உலக செஸ் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளார்.
Prasanth Subramani