24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் இணைந்தனர்: ‘We The Leader’ இயக்கத்திற்கு ஆதரவு அளித்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி

‘We The Leader’ இயக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இயக்கத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

24 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் இணைந்தனர்: ‘We The Leader’ இயக்கத்திற்கு ஆதரவு அளித்தவர்களுக்கு அண்ணாமலை நன்றி

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, தனது புதிய சமூக மற்றும் அரசியல் இயக்கமான ‘We The Leader’ (இது நம்ம இயக்கம்) அமைப்பிற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 லட்சம் பேர் இயக்கத்தில் இணைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய பிறகு, ஏற்கெனவே தொடங்கியிருந்த ‘We The Leader’ இயக்கத்தில் தனது ஆதரவாளர்கள் இணைந்து கொள்ளுமாறு அண்ணாமலை நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக அவர் இயக்கத்தின் இணையதள இணைப்பையும் வெளியிட்டார்.

அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டபோது, இயக்கத்தில் சுமார் 14 ஆயிரம் பேர் மட்டுமே உறுப்பினர்களாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே உறுப்பினர் சேர்க்கை வேகமெடுத்து, லட்சக்கணக்கானோர் இணைந்தனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட அண்ணாமலை, கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆதரவு தனக்கு மிகுந்த நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

அவர் தனது பதிவில், “கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, We The Leader இயக்கத்திற்கு அளித்துள்ள பேராதரவு பெரும் நெகிழ்ச்சியையும் பொறுப்பையும் அளித்துள்ளது. இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் மக்களின் கூட்டுப் பயணம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும் இந்த பேராதரவின் மூலம் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம். தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலையின் இந்த அறிவிப்பும், குறுகிய காலத்தில் இயக்கத்திற்கு கிடைத்துள்ளதாக கூறப்படும் பெரும் ஆதரவும் தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.