U19 ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டி: இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை! அரையிறுதியில் இரு அணிகளும் அபார வெற்றி
U19 ஆசியக் கோப்பை 2026 அரையிறுதியில் ஆப்கானிஸ்தானை இந்தியாவும், வங்கதேசத்தை பாகிஸ்தானும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. நவம்பர் 14ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடைபெறுகிறது.
ACC ஆடவர் U19 ஆசியக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளன. நவம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் இரு அணிகளும் அபார வெற்றி பெற்றன. இந்திய U19 அணி ஆப்கானிஸ்தான் U19 அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 228 ரன்கள் இலக்கை நிர்ணயித்த நிலையில், இந்திய அணி 36.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியின் லக்ஷ்யா ராய்ச்சந்தானி 90 பந்துகளில் 93 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார். மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் U19 அணி வங்கதேச U19 அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் விளையாடிய வங்கதேசம் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானுல்லா 30 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பின்னர் பாகிஸ்தான் அணி எளிதாக இலக்கை எட்டியது.
இந்த வெற்றிகளின் மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் U19 ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இந்தப் போட்டி நவம்பர் 14ஆம் தேதி ஓமனின் அல் அமராத் நகரில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்குப் போட்டி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பையைக் கைப்பற்ற இந்திய அணி இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் தனது பட்டத்தைத் தக்கவைக்க முயற்சிக்கும். இரு கிரிக்கெட் அணிகளுக்கும் இடையிலான இந்த இளையோர் இறுதிப்போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Prasanth Subramani