மீண்டும் அதிர்ச்சி கொடுத்த பெட்ரோல்-டீசல் விலை.. 2 வாரத்தில் 4வது முறையாக உயர்வு!
கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.107.77 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த இரண்டு வாரங்களில் நான்காவது முறையாக இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் நிலவும் போர் சூழ்நிலையின் தாக்கமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இந்த சூழலில், பெட்ரோலிய பொருட்களை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று மீண்டும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2.57 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு மொத்தமாக ரூ.7.20 மற்றும் டீசல் விலை ரூ.7.38 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விலை உயர்வின் அடிப்படையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ச்சியான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Prasanth Subramani