போஜ்ஷாலா விவகாரம்: “இது மசூதி”.. மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் தரப்பு வாதம்!
போஜ்ஷாலா - கமால் மௌலா மசூதி விவகாரத்தில், அந்த இடம் வரலாற்று ஆவணங்களில் மசூதியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் தரப்பு வாதிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா கோவில் - கமால் மௌலா மசூதி வளாகம் தொடர்பான வழக்கில், அந்த இடம் வரலாற்று வருவாய் ஆவணங்களில் “மசூதி” எனப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
இந்த வளாகத்தை இந்து அமைப்புகள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகக் கருதுகின்றன. மறுபுறம், முஸ்லிம் தரப்பு இதை 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கமால் மௌலா மசூதி எனக் கூறி வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய வளாகம் தற்போது இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் (ASI) பாதுகாப்பில் உள்ளது.
மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தோர் அமர்வில் நீதிபதிகள் விஜய் குமார் ஷுக்லா மற்றும் அலோக் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், சூஃபி புனிதர் மௌலானா கமாலுத்தீன் சிஷ்தியின் வழித்தோன்றலாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட காஜி மொய்னுத்தீன் தரப்பு வாதங்களை முன்வைத்தது.
அவரது வழக்கறிஞர் நூர் அஹ்மத் ஷேக், “இந்த வளாகம் அரசின் வருவாய் பதிவுகளில் மசூதியாக பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், கமால் மௌலா மசூதியை நிர்வகித்து வந்தவர்கள் நீண்டகாலமாக அமைதியான மற்றும் தொடர்ச்சியான கட்டுப்பாட்டில் இருந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
முஸ்லிம் சட்டங்களின்படி, மசூதி அல்லது வஃப் சொத்துக்களை நிர்வகிக்கும் சஜ்ஜாதநஷீன் மற்றும் முதவல்லி உள்ளிட்டோருக்கு அந்த இடத்தை நிர்வகிக்கும் உரிமை இருப்பதாகவும் அவர் வாதிட்டார்.
மேலும், 1904 ஆம் ஆண்டு தொன்மைச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் “சொத்தை பராமரித்து வரும் நபர்” என்ற கருத்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நீண்டகாலமாக கட்டுப்பாட்டில் இருந்தவர்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறப்பட்டது.
மறுபுறம், இந்து தரப்பினர் தாக்கல் செய்த பொதுநல மனுக்களில், போஜ்ஷாலா உண்மையில் ராஜா போஜ் நிறுவிய சரஸ்வதி கோவில் என்றும், அங்கு இந்துக்கள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் தௌசீப் வார்சி, “ராஜா போஜ் நிறுவிய சரஸ்வதி கோவில் இருந்ததற்கான தெளிவான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், போஜ்ஷாலா வளாகத்தில் 2024-ல் நடைபெற்ற அறிவியல் ஆய்வு மற்றும் வீடியோ பதிவு முறைகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்து, அதனை நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணை வியாழக்கிழமை தொடரவுள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக நான்கு மனுக்கள் மற்றும் ஒரு மேல் முறையீட்டை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
Prasanth Subramani