கேரளாவில் ஷிகெல்லா தொற்று பரவல்: வயநாட்டில் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
கேரள மாநிலத்தின் வயநாட்டில் உள்ள பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு ஷிகெல்லா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அறிகுறிகளுடன் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அறிகுறிகளுடன் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அசுத்தமான குடிநீர் மற்றும் உணவின் மூலம் பரவும் இந்த ஷிகெல்லா பாக்டீரியா தொற்று, சமீபத்தில் கேரளாவில் 4 வயது சிறுமி ஒருவரின் உயிரிழப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை எச்சரிக்கை நிலைக்கு மாறியுள்ளது.
ஷிகெல்லா என்பது மனிதர்களின் குடல்களை முதன்மையாக பாதிக்கும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்றுவலி, வாந்தி மற்றும் உடல் சோர்வு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். இந்த நோய் பெரும்பாலும் சுத்தமற்ற குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் பரவுகிறது.
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 85 பேருக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 70-க்கும் மேற்பட்டோர் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழா மற்றும் மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமை குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் முரளீதரன் விளக்கம் அளித்துள்ளார். பாதிப்பு தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறப்பு மருத்துவக் குழு வயநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாணவர்களுக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் யாரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் சுத்தமான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும், உணவுப் பொருட்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. கேரள அரசு தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதால், பொதுமக்கள் அச்சப்படாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Prasanth Subramani