அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. விரைவில் நாடுகடத்த நடவடிக்கை!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக லாரி ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி லாரி ஓட்டுநர்களாக பணியாற்றி வந்த 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Donald Trump அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, சட்டவிரோத குடியேற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, அரிசோனா மாநிலத்தின் Yuma Sector பகுதியில் கடந்த மே 11 முதல் 15 வரை "ஆபரேஷன் செக்மேட்" என்ற சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக தங்கி இருந்த 52 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 36 பேர் லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
30 பேர் இந்தியர்கள்
கைது செய்யப்பட்ட 36 லாரி ஓட்டுநர்களில் 30 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்கள் மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் ரஷ்யா நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலரிடம் மட்டுமே அமெரிக்காவின் கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் மற்றும் வர்ஜீனியா மாநிலங்களில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடுகடத்த நடவடிக்கை
கைது செய்யப்பட்ட 52 பேரையும் கூட்டாட்சிச் சட்டங்களின் கீழ் அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன்படி இந்தியர்களும் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் நாடுகடத்தல்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2025 நவம்பர் மாதம் வரை மட்டும் அமெரிக்காவில் இருந்து 3,258 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி வசித்து வரும் வெளிநாட்டினருக்கு இந்த நடவடிக்கைகள் பெரும் எச்சரிக்கையாக பார்க்கப்படுகின்றன.
Prasanth Subramani