இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் முழு சூரிய கிரகணம்: ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது. க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அரிய வானியல் நிகழ்வை காண முடியும்.
வானியல் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் அரிய நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம், சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த வானியல் அதிசயம் உலகின் சில பகுதிகளில் பகல் நேரத்தை சில நிமிடங்களுக்கு இரவாக மாற்றும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வந்து நிற்கும் போது, சூரியனின் ஒளி பூமியின் குறிப்பிட்ட பகுதிகளை அடையாமல் தடுக்கப்படுகிறது. இந்த நிகழ்வே முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் சூரியன் முழுமையாக மறைக்கப்பட்டு, வானம் தற்காலிகமாக இருண்டு காணப்படும்.
இந்த முறை நிகழவுள்ள முழு சூரிய கிரகணம் க்ரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ஸ்பெயின் மற்றும் வடகிழக்கு போர்த்துக்கல் பகுதிகளில் தெளிவாகக் காணப்படும். இந்த இடங்களில் பகல் நேரத்தில் சில நிமிடங்கள் சூரியன் முழுமையாக மறைந்துவிடும். இதனால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் வானியல் ஆர்வலர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும்.
அதே நேரத்தில், ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் பகுதிநேர சூரிய கிரகணம் மட்டுமே தென்படும். அங்கு சூரியனின் ஒரு பகுதி மட்டுமே நிலவால் மறைக்கப்படும்.
இதற்கு முன்பு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணம் காணப்பட்டது. மேலும், ஸ்பெயினில் கடைசியாக 1905ஆம் ஆண்டு முழு சூரிய கிரகணம் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அரிய நிகழ்வை இந்தியாவில் இருந்து நேரடியாகக் காண முடியாது. இருப்பினும், உலகின் பல விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் அமைப்புகள் இந்த நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிலும் மக்கள் இணையவழி நேரலையில் முழு சூரிய கிரகணத்தை காண முடியும்.
விஞ்ஞானிகளின் தகவலின்படி, அடுத்த முழு சூரிய கிரகணம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிகழும். அந்த கிரகணம் ஸ்பெயின், வடக்கு ஆப்ரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தென்படும்.
முழு சூரிய கிரகணத்தை நேரடியாக வெறுங்கண்களால் பார்ப்பது மிகவும் ஆபத்தானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சூரியன் மீண்டும் வெளிப்படத் தொடங்கும் தருணத்தில் கண்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, கிரகணத்தை பார்ப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட சூரிய கிரகண கண்ணாடிகள் அல்லது பாதுகாப்பான பார்வை உபகரணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த முழு சூரிய கிரகணம், வானியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Prasanth Subramani