விவசாயிகளுக்கு அதிரடி அறிவிப்பு.. கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர் விஜய்!

கூட்டுறவு வங்கிகளில் குறு மற்றும் சிறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.

விவசாயிகளுக்கு அதிரடி அறிவிப்பு.. கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்த முதல்வர் விஜய்!

தமிழக விவசாயிகளுக்கு முக்கிய நிவாரணமாக, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 25) அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் படி, குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதேசமயம், சிறு விவசாயிகளுக்கு ரூ.25,000 வரை அல்லது 50 சதவீதம் வரை கடன் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு பொருந்தும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு அறிவித்துள்ள தள்ளுபடி விவரங்கள் பின்வருமாறு:

  • ரூ.50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி
  • சிறு விவசாயிகளுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி
  • ரூ.50,001 முதல் ரூ.60,000 வரை கடன் பெற்றிருந்தால்:
    • குறு விவசாயிகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி
    • சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி
  • ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை கடன் பெற்றிருந்தால்:
    • குறு விவசாயிகளுக்கு ரூ.30,000 தள்ளுபடி
    • சிறு விவசாயிகளுக்கு ரூ.15,000 தள்ளுபடி
  • ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்றிருந்தால்:
    • குறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி
    • சிறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி
  • ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை மற்றும் ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றிருந்தால்:
    • குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்றுள்ள இதர பெரு விவசாயிகளுக்கும் தலா ரூ.5,000 தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு விவசாயிகள் புதிய கடன்களை எளிதாக பெற முடியும் என்றும், இது விவசாயிகளின் நிதிச் சுமையை குறைக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 14,22,555 விவசாயிகள் பயன்பெற உள்ளனர். இதற்காக தமிழக அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.