தமிழக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா?.. வெப்ப அலை காரணமாக முக்கிய ஆலோசனை!
தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படுமா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. வெப்ப அலை காரணமாக பள்ளி திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் அந்த தேதியை உறுதி செய்திருந்தது.
மேலும், 1 முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார்.
ஆனால், தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெய்யிலின் தாக்கம் இன்னும் குறையாமல் நீடித்து வருகிறது. பல மாவட்டங்களில் தொடர்ந்து வெப்ப அலை வீசிவரும் நிலையில், மாணவர்களின் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதன்காரணமாக, பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் வெப்ப அலை தொடருமா? வெப்பத்தின் தாக்கம் எந்த அளவில் இருக்கும்? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் தமிழக அரசு விரிவான அறிக்கை கோரியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, முதல்வர் ஜோசப் சி. விஜய் தலைமையில் அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் அடிப்படையில், பள்ளிகள் திறப்பு ஜூன் இரண்டாவது வாரத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prasanth Subramani