மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 2 வாரத்தில் 5வது அதிர்ச்சி!

கடந்த இரண்டு வாரங்களில் ஐந்தாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ.108.01 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 2 வாரத்தில் 5வது அதிர்ச்சி!

கடந்த இரண்டு வாரங்களில் ஐந்தாவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் மேற்காசிய பதற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல்கள் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. உலக எரிசக்தி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதே கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அதிக எரிபொருள் தேவையுள்ள நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2022 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சுமார் நான்கு ஆண்டுகள் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்த நிலையில், இந்த ஆண்டு மே 15 முதல் தொடர்ந்து விலை உயர்வு நடைபெற்று வருகிறது.

மே 15, 19, 23 மற்றும் மே 25 ஆகிய தேதிகளில் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (மே 26) ஐந்தாவது முறையாக மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலைப்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.108.01 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ.99.78 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ச்சியான எரிபொருள் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் மேலும் உயரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.