எரிபொருள் விலை தாக்கம்.. உள்நாட்டு விமான சேவைகளை 22% குறைக்கும் ஏர் இந்தியா!

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அதிகரித்த இயக்கச் செலவுகள் காரணமாக ஏர் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை தாக்கம்.. உள்நாட்டு விமான சேவைகளை 22% குறைக்கும் ஏர் இந்தியா!

எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனால் ஏற்படும் கூடுதல் இயக்கச் செலவுகள் காரணமாக ஏர் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நிதி நெருக்கடி மற்றும் செயல்பாட்டு இழப்புகளை சந்தித்து வரும் ஏர் இந்தியா, தனது சர்வதேச விமான சேவைகளையும் சுமார் 27 சதவீதம் வரை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஏர் இந்தியா வாரத்திற்கு சுமார் 4,400 விமானங்களை இயக்கி வருகிறது. இதில் 3,600 விமானங்கள் உள்நாட்டு சேவைகளாகவும், மீதமுள்ள 800 விமானங்கள் சர்வதேச சேவைகளாகவும் செயல்படுகின்றன.

இந்த நிலையில், ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலகட்டத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமான சேவைகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சர்வதேச சேவை மாற்றங்களின் தொடர்ச்சியாக, சில உள்நாட்டு வழித்தடங்களிலும் சேவைகள் சீரமைக்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், உள்நாட்டு விமான சேவைகள் 20 முதல் 22 சதவீதம் வரை குறைக்கப்படும் என்றும், தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலையே இந்த முடிவிற்கான முக்கிய காரணம் என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த மாற்றங்களால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு மாற்று விமானங்களில் இடமளித்தல், பயண தேதியை கட்டணமின்றி மாற்றிக் கொள்ள அனுமதி வழங்குதல் அல்லது முழு கட்டணத்தையும் திருப்பி வழங்குதல் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தை நிலைமை மற்றும் எரிபொருள் விலை சீரானதும், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு விமான சேவைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.