கடுமையான சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை.. உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

தகவல் தொழில்நுட்ப மற்றும் வங்கி பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், கடுமையான சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன.

கடுமையான சரிவுக்குப் பிறகு மீண்ட பங்குச் சந்தை.. உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ளூ-சிப் நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியதால், கடுமையான சரிவுக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தைகள் மீண்டு உயர்வுடன் நிறைவடைந்தன.

இன்றைய காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 1,134.78 புள்ளிகள் சரிந்து 74,180.26 புள்ளிகளாக இருந்தது. ஆனால் பின்னர் வாங்கும் ஆர்வம் அதிகரித்ததால் சந்தை மீண்டு, வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 77.05 புள்ளிகள் உயர்ந்து 75,315.04 புள்ளிகளாக முடிவடைந்தது.

அதேபோல், நிஃப்டி குறியீடும் 6.45 புள்ளிகள் உயர்ந்து 23,649.95 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், சன் பார்மா, எச்.சி.எல் டெக், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டன.

மறுபுறம் டாடா ஸ்டீல், பவர் கிரிட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் என்.டி.பி.சி போன்ற பங்குகள் சரிவில் முடிந்தன.

நிஃப்டி 200 குறியீட்டில் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ், கோஃபோர்ஜ் மற்றும் ஆரக்கிள் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் 4 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்தன.

இன்றைய வர்த்தகத்தில் சுமார் 1,216 பங்குகள் உயர்ந்த நிலையில், 2,891 பங்குகள் சரிவை சந்தித்தன. மேலும், 182 பங்குகள் எந்த மாற்றமும் இன்றி முடிவடைந்தன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீடித்துவரும் பதற்ற நிலை குறுகிய கால சந்தை மனநிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் தகவல் தொழில்நுட்ப மற்றும் வங்கி பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால் சந்தை மீள்ச்சி கண்டது.

இன்றைய வர்த்தக அமர்வில் தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பாக செயல்பட்ட துறைகளில் ஒன்றாக இருந்தது. இந்தத் துறை குறியீடு 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

ஆசிய சந்தைகளில் ஜப்பானின் நிக்கி, சீனாவின் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடுகள் சரிவில் முடிந்தன. அதே நேரத்தில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு உயர்வுடன் நிறைவடைந்தது.

ஐரோப்பிய சந்தைகள் கலவையான போக்கில் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் கடந்த வெள்ளிக்கிழமை 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவுடன் முடிவடைந்திருந்தன.

மேலும், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.1,329.17 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.73 சதவீதம் உயர்ந்து 110.1 அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.