எபோலா வைரஸ் எச்சரிக்கை.. டெல்லி விமான நிலையம் முக்கிய அறிவிப்பு!
எபோலா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை தொடர்ந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
எபோலா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை தொடர்ந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGI Airport) முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் போன்ற அதிக ஆபத்து கொண்ட நாடுகளிலிருந்து வரும் அல்லது அந்த நாடுகள் வழியாக பயணம் செய்த பயணிகள் உடல்நலக் குறைவு இருந்தால் உடனடியாக விமான நிலைய சுகாதார அதிகாரிகளை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, மத்திய சுகாதாரச் செயலாளர் மாநிலங்களுடன் நடத்திய உயர் மட்ட ஆலோசனைக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் நோய் (EVD) தொடர்பான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காய்ச்சல், உடல் பலவீனம், தலைவலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காரணமின்றி இரத்தப்போக்கு மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதார அதிகாரிகளை அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், எபோலா நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களின் ரத்தம் அல்லது உடல் திரவங்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் குடியுரிமை சோதனைக்கு முன்பாகவே விமான நிலைய சுகாதார மையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் இந்தியா வந்த 21 நாட்களுக்குள் மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், தங்களின் பயண வரலாற்றை சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளை கருத்தில் கொண்டு சுகாதார பரிசோதனைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) தகவலின்படி, காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது 51 எபோலா நோய்த்தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பாதிப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என WHO எச்சரித்துள்ளது.
எபோலா வைரஸ் நோய் மிகவும் ஆபத்தான மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய நோயாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்கள், மாசடைந்த பொருட்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடலுடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடும் என Africa CDC தெரிவித்துள்ளது.
Prasanth Subramani