பெண்களுக்கான விளையாட்டு வளர்ச்சியை முன்னெடுத்த SRV பள்ளி இன்டராக்ட் கிளப்!

கோவை சரஸ்வதி ராமச்சந்திர வித்யாலயா பள்ளியின் இன்டராக்ட் கிளப் சார்பில் “More Sports for Girls, More Girls for Sports” என்ற விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்களிடையே விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பெண்களுக்கான விளையாட்டு வளர்ச்சியை முன்னெடுத்த SRV பள்ளி இன்டராக்ட் கிளப்!

சரஸ்வதி ராமச்சந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இன்டராக்ட் கிளப் சார்பில் “More Sports for Girls, More Girls for Sports” என்ற விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சி செப்டம்பர் 3, 2026 அன்று காலை 11.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் பள்ளி மேம்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை சேஞ்ச்மேக்கர்ஸ் ரோட்டராக்ட் கிளப் மற்றும் ரோட்டரி இ-கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சேஞ்ச்மேக்கர்ஸ் ஆகியவை இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கின.

இந்த முயற்சி “More Sports for Girls” மற்றும் “More Girls for Sports” என இரண்டு பகுதிகளாக செயல்படுத்தப்பட்டது.

“More Sports for Girls” என்ற திட்டத்தின் கீழ், குறிப்பாக பள்ளி மாணவிகளிடையே பல்வேறு விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2028 ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற உள்ள 36 விளையாட்டுகளை விளக்கும் வகையில் சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டது. கோவை சேஞ்ச்மேக்கர்ஸ் ரோட்டராக்ட் கிளப் தலைவர் ரோட்டராக்டர் நவீன் பிரசாத், பல்வேறு விளையாட்டுகள் குறித்து சுருக்கமாக விளக்கினார்.

இந்த போஸ்டரை சரஸ்வதி ராமச்சந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். மாணவிகள் பல்வேறு விளையாட்டுகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில், பள்ளியின் அனைத்து அறிவிப்புப் பலகைகளிலும் வகுப்பறைகளிலும் போஸ்டர் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

“More Girls for Sports” திட்டத்தின் கீழ், மாணவிகள் விளையாட்டில் ஈடுபட்டு பயிற்சி பெறுவதற்கு உதவும் வகையில் ரூ.6,000 மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் இன்டராக்ட் கிளப் சார்பில் வழங்கப்பட்டன. ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3206-ன் முன்னாள் DRR மற்றும் சிறப்பு அழைப்பாளர் ரோட்டராக்டர் சதீஷ் பாலகிருஷ்ணன், விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் யோகிதா, ஆசிரியர் ஆலோசகர் ஃபனீட்டா, ரோட்டராக்டர் விஷ்ணு சங்கர் மற்றும் ரோட்டரி ஆலோசகர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், உடற்கல்வி ஆசிரியர்களும் இன்டராக்ட், ரோட்டராக்ட் மற்றும் ரோட்டரி கிளப் உறுப்பினர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ரோட்டராக்டர் சதீஷ் பாலகிருஷ்ணன், விளையாட்டை அன்றாட வாழ்க்கையின் ஒரு பழக்கமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஒவ்வொரு மாணவியும் மூன்று விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்றும், ஒன்று உடற்தகுதிக்காகவும், ஒன்று பழக்கமாகவும், மற்றொன்று மகிழ்ச்சிக்காகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முன்னாள் ஹாக்கி வீராங்கனையான துணை முதல்வர் யோகிதா, விளையாட்டு வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தை வளர்க்க உதவும் என்று குறிப்பிட்டார்.

இன்டராக்ட் கிளப் தலைவர் இன்ட்ராக்டர் சன்விகா வரவேற்புரையாற்றினார். இன்டராக்ட் கிளப் இயக்குநர் இன்ட்ராக்டர் சாய் அண்ணாமலை, ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப் பள்ளி மேம்பாட்டு நிகழ்ச்சி குறித்து விளக்கினார். இன்டராக்ட் கிளப் செயலாளர் இன்ட்ராக்டர் தனிஷா நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சரஸ்வதி ராமச்சந்திர வித்யாலயா பள்ளியின் இன்டராக்டர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டை தங்களது பொழுதுபோக்கு, அன்றாட நடைமுறை அல்லது எதிர்கால வாழ்க்கையின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்வதுடன், மேலும் பலரை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிப்போம் என இன்டராக்டர்கள் உறுதியேற்றனர்.