தமிழக பள்ளிகளில் புத்தகப் பை சுமை குறையும்... ஏஐ கல்வியுடன் புதிய பாடத்திட்டம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர்களின் புத்தகப் பை சுமை குறைக்கப்படும், கதைகள் மூலம் கணிதம் கற்பிக்கப்படும், QR கோடு, ஏஐ கல்வி உள்ளிட்ட பல்வேறு புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி முறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் புத்தகப் பை சுமையை குறைத்து, கற்றலை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும் வகையில் புதிய பாடத்திட்ட மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற பாடத்திட்ட தயாரிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "தமிழ்நாட்டின் கல்வி இனி குழந்தைகளை மையமாகக் கொண்ட கல்வி முறையாக மாறும். மாணவர்கள் மனப்பாடம் செய்யும் முறைக்கு பதிலாக, புரிந்துகொண்டு கற்கும் முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்" என்றார்.
மாணவர்களின் உடல் மற்றும் மனச்சுமையை குறைக்கும் வகையில், பள்ளி புத்தகப் பை எடை கணிசமாக குறைக்கப்படும் என்றும், இதன் மூலம் மாணவர்களின் மனஅழுத்தமும் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கணிதம் போன்ற பாடங்கள் இனி கதைகளின் வடிவில் எளிமையாக கற்பிக்கப்படும். பாடப்புத்தகங்களில் அதிக அளவில் வண்ணப்படங்கள் இடம்பெறும். குறைந்த எழுத்துகளுடன், படங்களே பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள உதவும் வகையில் புத்தகங்கள் வடிவமைக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கினார்.
புதிய பாடப்புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்திற்கும் QR கோடுகள் இணைக்கப்படும். மாணவர்கள் அந்த QR கோடுகளை ஸ்கேன் செய்தால், சம்பந்தப்பட்ட பாடங்கள் காணொலி வடிவில் கிடைக்கும். இதன் மூலம் டிஜிட்டல் கற்றல் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பம் தொடர்பான அடிப்படை அறிவும் திறன்களும் கற்பிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். "ஏஐ நமது வேலைகளை பறித்துவிடும் என்று யாரும் அச்சப்பட தேவையில்லை. அதை சரியாக பயன்படுத்தக் கற்றுக்கொள்வதே எதிர்காலத்தின் தேவை" என்றும் அவர் கூறினார்.
ஆசிரியர் தேர்விலும் திறமைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும், அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களிடையே தினசரி செய்தித்தாள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பள்ளிக் கல்வித் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, ஊழலை முழுமையாக ஒழிப்பதே தனது முதல் முன்னுரிமை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தினார்.
மாணவர்களை மையமாகக் கொண்டு, தொழில்நுட்பம் சார்ந்த, மனஅழுத்தமற்ற மற்றும் திறன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் புதிய கல்வி முறையை உருவாக்கும் நோக்கில் தமிழக அரசு மேற்கொள்ளும் இந்த அறிவிப்புகள், கல்வித்துறையில் முக்கியமான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Prasanth Subramani