ரூ.4.5 கோடி தொழில் அழிந்தது: நேபாள வெள்ளத்தில் அனைத்தையும் இழந்த இந்திய தொழிலதிபர்
நேபாளத்தின் திரிஷூலி பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் அசோக் குமார் சௌராசியா ரூ.4.5 கோடி மதிப்பிலான தொழில் மற்றும் சொத்துகளை இழந்துள்ளார்.
நேபாளத்தின் திரிஷூலி பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில், உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய தொழிலதிபர் அசோக் குமார் சௌராசியா தனது பல ஆண்டுகால தொழில் மற்றும் சொத்துகளை இழந்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளாக நேபாளத்தின் திரிஷூலி பஜாரில் ஆடை வியாபாரம் செய்து வந்த அசோக் குமார் சௌராசியாவுக்கு 4 கடைகள் மற்றும் 6 ஆடை குடோன்கள் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். வெள்ளப்பெருக்கில் இவை அனைத்தும் அழிந்ததுடன், சுமார் ரூ.4.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மற்றும் தொழில் பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த பேரழிவில் அவரது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது உறவினரான உஷா தேவியின் உடல் மீட்கப்பட்ட நிலையில், அவரது மருமகன் ராகுல் சௌராசியா இன்னும் காணவில்லை என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தில் தனது உடைமைகள் அனைத்தையும் இழந்ததால், தற்போது மற்றவர்களிடம் இருந்து ஆடைகளை வாங்கி அணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அசோக் குமார் சௌராசியா தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு திரும்பி மீண்டும் தொழில் தொடங்குவதற்கு கடன் உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Dharshini