ஆப்கானிஸ்தான் 152 ரன்களில் சுருண்டது: அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட் வீழ்த்தி அசத்திய மானவ் சுதர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அறிமுக வீரர் மானவ் சுதர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முழுமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 564 ரன்கள் குவித்த இந்திய அணிக்கு பதிலளிக்க களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி வெறும் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
நியூ சண்டீகரில் ஜூன் 6ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கேப்டன் ஷுப்மன் கில் 126 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 100 ரன்கள் எடுத்தார். சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பந்த் தலா 81 ரன்கள் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் 52 ரன்கள் எடுத்து அணியின் மொத்தத்தை 564 ரன்களாக உயர்த்த உதவினார். பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது சலீம் சஃபி சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரஹ்மான் ஷரிஃபி மற்றும் ஹஸ்மதுல்லா ஷகிதி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
முதல் இன்னிங்ஸில் பதிலடி கொடுக்க களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 113 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு மீதமிருந்த விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா மட்டுமே போராடி 60 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் அறிமுக வீரரான மானவ் சுதர் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
412 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தியா ஃபாலோ-ஆன் வழங்கியது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, மூன்றாம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. மானவ் சுதரின் அறிமுக ஆட்டமும், இந்திய அணியின் முழுமையான ஆதிக்கமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Prasanth Subramani