சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 2 பேர் உயிரிழப்பு.. 7000 பேர் வெளியேற்றம்!
சீனாவின் குவாங்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட 5.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 7000 பேர் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள குவாங்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல வீடுகள் மற்றும் கட்டடங்களை கடுமையாக உலுக்கியதாக கூறப்படுகிறது.
இந்த பேரிடரில் சுமார் 13 கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும், நிலச்சரிவு ஏற்பட்டதால் பல முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து லியுசோ நகரத்தில் வசிக்கும் சுமார் 7,000 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 91 வயது முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை மீட்டதன் மூலம் அதிகாலை முதல் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கு மாகாணங்கள் நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாக கருதப்படுகின்றன. குறிப்பாக, கடந்த 2008ஆம் ஆண்டு சிஞ்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 87,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.
Prasanth Subramani