சீனாவை தாக்கிய ‘சவுடெல்’ புயல்: வெள்ளத்தில் இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்
சீனாவின் தெற்கு கடலோரப் பகுதிகளில் சவுடெல் புயல் காரணமாக கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. புஜியான் மாகாணத்தில் வெள்ளநீரில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.
சீனாவின் தெற்கு கடலோரப் பகுதிகளில் சவுடெல் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புஜியான் மற்றும் குவாங்டாங் மாகாணங்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
புஜியான் மாகாணத்தின் புத்யான் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிடம் வெள்ளநீருக்குள் சரிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகள் மற்றும் சம்பவம் நடைபெற்ற இடம் தொடர்பான தகவல்களை ராய்ட்டர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், ஃபுடிங் நகரில் இடுப்பளவு வெள்ளநீரில் சிக்கிய முதியவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது உள்ளிட்ட அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சவுடெல் புயல் செப்டம்பர் 3-ம் தேதி புஜியான் கடற்கரையில் மூன்றாவது முறையாக கரையை கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயல் 2026-ஆம் ஆண்டில் சீனாவை தாக்கிய 7-வது புயல் என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
தொடர் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Dharshini