நயாரா அதிரடி... பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.3 விலை குறைப்பு அமல்!
இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் தணிந்து கச்சா எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலையை ரூ.3 குறைத்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்தது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றம் தணிந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், தனியார் எரிபொருள் நிறுவனமான நயாரா தனது பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்துள்ளது.
மேற்காசியாவில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு இடையே நீடித்த பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதன் தாக்கமாக பல நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டதுடன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்தது.
இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியிருந்தது.
தற்போது மேற்காசியப் பகுதியில் போர் பதற்றம் தணிந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்ததோடு எரிபொருள் விநியோகமும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதையடுத்து நயாரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளது.
இந்த புதிய விலை குறைப்பு நயாரா நிறுவனத்தின் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் சுமார் 7,000 பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கிடையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை இதுவரை இதேபோன்ற விலை குறைப்பை அறிவிக்கவில்லை.
Prasanth Subramani