போடேகோஷி வெள்ளம்: 12,000 பேர் மீட்பு; 4,216 பேர் மாயம் – பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு
நேபாளத்தின் போடேகோஷி வெள்ளத்தில் சுமார் 12,000 பேர் மீட்கப்பட்ட நிலையில், 4,216 பேர் மாயமாகியுள்ளனர். பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு போடேகோஷி வெள்ளத்தைத் தொடர்ந்து சுமார் 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், 4,216 பேர் தொடர்ந்து மாயமாகியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளதாகவும் நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ராணுவம், காவல்துறை மற்றும் ஆயுதம் தாங்கிய காவல் படையைச் சேர்ந்த 21,300-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ராசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ராசுவாவில் 865 பேரும், நுவாகோட்டில் 1,558 பேரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாயமானவர்களில் 583 வெளிநாட்டினரும், சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற 164 நேபாளியர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாள ராணுவம் இதுவரை 690 முறை வான்வழி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, 4,364 பேரை மீட்டுள்ளது. அவர்களில் 4,091 பேர் நேபாளியர்கள் என்றும், 273 பேர் வெளிநாட்டினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லவும், சிக்கித் தவித்தவர்களை மீட்கவும் தனியார் விமான இயக்குநர்கள் 29 விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
சேதமடைந்த சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக துண்டிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வதுடன், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு அதிகாரிகள் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
Dharshini