மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா அபாரம்... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!
ICC 10வது மகளிர் T20 உலகக்கோப்பை முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆஷ்லி கார்ட்னர் ஆட்டநாயகி விருதை வென்றார்.
ICC 10வது மகளிர் T20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி மீண்டும் ஒருமுறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கத்தில் Hayley Matthews மட்டும் நம்பிக்கை அளித்தாலும், ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர். Georgia Wareham, Sophie Molineux மற்றும் Ashleigh Gardner ஆகியோரின் அசத்தலான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 47/0 என்ற நிலையிலிருந்து 84/6 என சரிந்தது.
காயம் இருந்தபோதிலும் Deandra Dottin இறுதிக்கட்டத்தில் பொறுப்புடன் விளையாடி அணியை 126/7 என்ற போராடக்கூடிய இலக்கை எட்டச் செய்தார்.
127 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு Beth Mooney அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்கத்தில் Georgia Voll விக்கெட்டை இழந்தாலும், Beth Mooney அமைதியாகவும் அதிரடியாகவும் ரன்கள் குவித்தார். பின்னர் Ashleigh Gardner உடன் இணைந்து வெற்றியை எளிதாக்கினார்.
Beth Mooney அரைசதம் அடித்த நிலையில், Ashleigh Gardner தனது அதிரடியான ஆட்டத்தால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆஸ்திரேலியா 13 ஓவர்களில் 127/2 என்ற இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்ட Ashleigh Gardner ஆட்டநாயகி விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மகளிர் T20 உலகக்கோப்பை வரலாற்றில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது. ஏழாவது உலகக்கோப்பை பட்டத்தை வெல்லும் கனவுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள ஆஸ்திரேலிய அணியை, இங்கிலாந்து அல்லது தென்னாப்பிரிக்கா அணி இறுதியில் எதிர்கொள்ளவுள்ளது.
Prasanth Subramani