வடவள்ளி–மருதமலை சாலையில் தொடரும் தூசி பிரச்சனை: சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
கோயம்புத்தூர் வடவள்ளி–மருதமலை சாலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகள் 6 மாதங்களாக முறையாக சீரமைக்கப்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தூசி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சாலையை தார் போட்டு சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் வடவள்ளி–மருதமலை சாலையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகள் முறையாக சீரமைக்கப்படாததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
சுமார் 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் மற்றும் கழிவுநீர் பணிகளுக்காக சாலையின் சில பகுதிகள் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. பணிகள் முடிவடைந்த பின்னரும், தோண்டப்பட்ட பகுதிகள் முழுமையாக சீரமைக்கப்படாமல் செம்மண் மற்றும் மண் பகுதிகளாகவே இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், வாகனங்கள் அந்தப் பகுதிகளை கடந்து செல்லும்போது அதிக அளவில் செம்மண் தூசி எழுகிறது. குறிப்பாக வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நேரங்களில் சாலையோரம் வசிக்கும் மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தூசியால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், சாலையில் செல்லும் வாகனங்களால் தூசி தொடர்ந்து காற்றில் பரவுவதால், அருகிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளிலும் மண் படிவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
குடிநீர் மற்றும் கழிவுநீர் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தோண்டப்பட்ட பகுதிகளை வெறுமனே மண் போட்டு மூடாமல், முழுமையாக தார் போட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சாலையின் தற்போதைய நிலையை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு விரைந்து சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடவள்ளி–மருதமலை சாலை முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக இருப்பதால், சாலை சீரமைப்பு பணிகளை தாமதமின்றி முடித்து தூசி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Dharshini