தங்கம் விலையில் அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,200 குறைவு
தமிழ்நாட்டில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,800க்கும், ஒரு சவரன் ரூ.1,10,400க்கும் விற்பனையாகிறது.
தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்து, ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,200 வரை சரிவைக் கண்டுள்ளது.
இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் உயர்வு கண்டது. ஆனால் இன்று (புதன்கிழமை) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து ரூ.13,800 ஆக விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தங்கம் மட்டுமின்றி வெள்ளி விலையும் இன்று சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.260 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.10,000 குறைந்து ரூ.2.60 லட்சமாகவும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தைகளில் நிலவும் மாற்றங்களே தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் ஏற்ற, இறக்கங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளன. குறிப்பாக மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் சந்தையில் முதலீட்டு மாற்றங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழ்நிலைகள் தங்கத்தின் விலையை தொடர்ந்து பாதித்து வருகின்றன.
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்றைய சரிவு நகை வாங்குவோருக்கு சற்று நிவாரணமாக அமைந்துள்ளது. திருமணங்கள் மற்றும் விழாக்கால நகை வாங்குதலுக்காக காத்திருந்தவர்களும் இந்த விலை குறைப்பை வரவேற்றுள்ளனர்.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை போன்ற காரணிகளை பொறுத்து வரும் நாட்களிலும் தங்கம் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்படலாம் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள விலை சரிவு, தங்க முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Prasanth Subramani