ஊதா நிறத்தில் மாறும் மூணாறு! 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலர்ந்த நீலக்குறிஞ்சி – குவியும் சுற்றுலாப் பயணிகள்
12 ஆண்டுகளுக்குப் பிறகு மூணாறு மலைப்பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் அதிகளவில் மலர்ந்துள்ளன. ஊதா நிறத்தில் மாறிய மலைச்சரிவுகளை காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மலைப்பகுதிகளில் அரிய நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது அதிகளவில் மலர்ந்து வருகின்றன. இதனால் மூணாறு மலைச்சரிவுகள் நீல–ஊதா நிறத்தில் காட்சியளித்து, சுற்றுலாப் பயணிகளையும் இயற்கை ஆர்வலர்களையும் வெகுவாக கவர்ந்து வருகின்றன.
சோக்கிரமுடி, மட்டுப்பட்டி மற்றும் கொரண்டக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நீலக்குறிஞ்சி மலர்கள் பரவலாக பூத்துள்ளன. குறிப்பாக சோக்கிரமுடி பகுதியில் மட்டும் சில நாட்களில் 4,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நீலக்குறிஞ்சி மலர்களைக் காண வருகை தந்துள்ளனர்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் தன்மை கொண்ட நீலக்குறிஞ்சியின் தற்போதைய மலர்ச்சி, மூணாறு மலைப்பகுதிக்கு தனித்துவமான இயற்கை அழகை சேர்த்துள்ளது. மலைச்சரிவுகள் முழுவதும் நீல–ஊதா நிறத்தில் காட்சியளிப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் நீலக்குறிஞ்சி மலர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மலர்களை பறிக்கவோ, மிதிக்கவோ அல்லது தாவரங்களை சேதப்படுத்தவோ கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இயற்கையின் அரிய அழகை பாதுகாக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Dharshini