லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் தேர்தல்: இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய தமிழ்ப் பெண் நித்யா ராமன்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் தேர்தலுக்கான முதல்நிலைத் தேர்தலில் தமிழ்ப் பெண்ணான நித்யா ராமன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இறுதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு அதிகரித்துள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் தேர்தல்: இரண்டாம் இடத்துக்கு முன்னேறிய தமிழ்ப் பெண் நித்யா ராமன்

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் மேயர் தேர்தலுக்கான முதல்நிலைத் தேர்தலில் தமிழ்ப் பெண்ணும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரசியல்வாதியுமான நித்யா ராமன் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இறுதித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு அதிகரித்துள்ளது.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் மேயர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் முக்கிய இரண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் முதல்நிலைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூன் 2ஆம் தேதி நடைபெற்றது. பெரும்பாலான வாக்காளர்கள் தபால் வாக்குகள் மூலம் வாக்களித்துள்ளதால், அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகே இறுதி முடிவுகள் வெளியாகும்.

தற்போதைய மேயரும், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான 72 வயதான கரேன் பாஸ் 34.7 சதவீத வாக்குகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் இறுதித் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இரண்டாவது இடத்துக்கான போட்டியில் லாஸ் ஏஞ்சலீஸ் நகர மன்ற உறுப்பினரான நித்யா ராமன் மற்றும் தொலைக்காட்சி பிரபலமான ஸ்பென்சர் பிராட் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியான தகவலின்படி, நித்யா ராமன் சுமார் 40 சதவீத வாக்குகளைப் பெற்று, 3,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்பென்சர் பிராட்டை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நித்யா ராமன் யார்?

1981ஆம் ஆண்டு கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் குடும்பத்தில் பிறந்த நித்யா ராமன், தனது 6 வயதில் பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்ததுடன், மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் நகரத் திட்டமிடல் துறையில் உயர் கல்வி பயின்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் சென்னையில் துப்புரவு மற்றும் சுகாதார மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி பணியாற்றிய அவர், பின்னர் 2013ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸுக்கு குடிபெயர்ந்தார். அங்கு வீடற்ற மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் நோக்கில் ‘SELAH’ என்ற சமூக அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வந்தார்.

2020ஆம் ஆண்டு, அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் செல்வாக்கு மிக்க ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடித்து, லாஸ் ஏஞ்சலீஸ் நகர மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தெற்காசிய பெண் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

நகர மன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில், நகர வளர்ச்சி, வீடமைப்பு மற்றும் வீடற்றவர்களுக்கான குறைந்த விலை வீட்டு திட்டங்கள் போன்றவற்றில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

தற்போது லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் தேர்தலின் இறுதிக்கட்டத்தை நோக்கி முன்னேறி வரும் நித்யா ராமன், அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினரின் வளர்ந்து வரும் செல்வாக்கின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். நவம்பர் மாத இறுதித் தேர்தலில் அவர் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையை அவர் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.