இன்று IPL எலிமினேட்டர் மோதல்.. ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகளில் யார் வெளியேறப் போகிறார்கள்?

IPL 2026 எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. வெற்றி பெறும் அணி குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறும்.

இன்று IPL எலிமினேட்டர் மோதல்.. ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகளில் யார் வெளியேறப் போகிறார்கள்?

IPL 2026 தொடரின் முக்கியமான ‘எலிமினேட்டர்’ போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று (மே 27) மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தீர்மானிக்கும் ‘குவாலிஃபயர் 2’ சுற்றுக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பதால், இந்த போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லீக் சுற்று முடிவில் ஹைதராபாத் அணி 18 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 16 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இரு அணிகளும் தங்களது கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று நல்ல ஃபார்மில் உள்ளன. இருப்பினும், இந்த சீசனில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய இரு போட்டிகளிலும் ஹைதராபாத் வெற்றி பெற்றிருப்பது அந்த அணிக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கிறது.

IPL வரலாற்றிலும் ஹைதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அணிகளும் இதுவரை 23 முறை மோதியுள்ள நிலையில், ஹைதராபாத் 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் பலம் என்ன?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சீசனின் முதல் பாதியில் சற்றே மெதுவாக தொடங்கினாலும், பின்னர் அபாரமாக மீண்டு வந்தது.

கேப்டன் பேட் கம்மின்ஸ் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, கடைசி 7 லீக் போட்டிகளில் 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

பேட்டிங்கில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷண் மற்றும் ஹென்ரிச் கிளாசென் போன்ற அதிரடி வீரர்கள் அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளனர்.

பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ், ஈஷான் மலிங்கா, சகிப் ஹுசைன் மற்றும் பிரஃபுல் ஹிங்கே ஆகியோர் எதிரணிக்கு சவால் அளித்து வருகின்றனர்.

ராஜஸ்தான் நம்பிக்கை

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், கடைசி கட்டத்தில்தான் பிளேஆஃப்ஸ் வாய்ப்பை உறுதி செய்தது.

பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் ரன் குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர், நாண்ட்ரே பர்கர் மற்றும் யஷ்ராஜ் பஞ்சா ஆகியோர் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆடுகளம் எப்படி?

முலான்பூர் கிரிக்கெட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானமாக கருதப்படுகிறது. இங்கு நடைபெற்ற 4 லீக் போட்டிகளில் 3 போட்டிகளில் 220+ ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன.

சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சற்று உதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. டாஸ் வெல்லும் அணி chasing தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம்.

வானிலை அறிக்கையின்படி, போட்டிக்கு மழை பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி விவரம்

  • நேரம்: இரவு 7.30 மணி
  • இடம்: முலான்பூர்
  • நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்