கனடியன் கிராண்ட் பிரிக்ஸில் அதிர்ச்சி திருப்பம்.. அன்டோனெல்லி தொடர்ச்சியாக 4வது வெற்றி!
2026 கனடியன் கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடீஸ் அணியின் கிமி அன்டோனெல்லி வெற்றி பெற்றார். ஜார்ஜ் ரசல் ரேஸில் விலகிய நிலையில், ஹாமில்டன் 2வது இடமும் வெர்ஸ்டாப்பன் 3வது இடமும் பிடித்தனர்.
2026 கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி ரசிகர்களுக்கு பல அதிர்ச்சி திருப்பங்களை வழங்கியது. மெர்சிடீஸ் அணியின் இளம் நட்சத்திரமான கிமி அன்டோனெல்லி அபாரமாக செயல்பட்டு போட்டியில் வெற்றி பெற்றார்.
போட்டியின் ஆரம்பத்தில் அவரது அணி தோழரான ஜார்ஜ் ரசல் முன்னிலையில் இருந்தார். ஆனால், ரேஸின் முக்கிய கட்டத்தில் அவரது காரில் ஏற்பட்ட power unit கோளாறு காரணமாக அவர் போட்டியிலிருந்து விலக நேரிட்டது. இதனால் அன்டோனெல்லிக்கு வெற்றிக்கான வாய்ப்பு உருவானது.
இந்த வெற்றியின் மூலம் கிமி அன்டோனெல்லி தொடர்ச்சியாக நான்காவது ரேஸ் வெற்றியை பதிவு செய்துள்ளார். மேலும், உலக சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் தனது முன்னிலையை அதிகரித்துள்ளார்.
இதற்கிடையில், ஃபெராரி அணிக்காக விளையாடும் லூயிஸ் ஹாமில்டன் இந்த சீசனில் தனது சிறந்த பிரதான ரேஸ் முடிவை பதிவு செய்து 2வது இடத்தை பிடித்தார். அவரது அணி தோழர் சார்ல்ஸ் லெக்லெர்க் 4வது இடத்தில் போட்டியை முடித்தார்.
மற்றொரு முக்கிய நிகழ்வாக, ரெட் புல் ரேசிங் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் இந்த சீசனில் தனது முதல் podium finish-ஐ பதிவு செய்து 3வது இடத்தை பிடித்தார்.
போட்டிக்குப் பிறகு பேசிய வெர்ஸ்டாப்பன், “இந்த முடிவு மகிழ்ச்சியளித்தாலும், ரெட் புல் அணி இன்னும் பல மேம்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் முடிவுகள், 2026 Formula 1 சீசனின் சாம்பியன்ஷிப் போட்டியை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
Prasanth Subramani