சென்னையில் டெஸ்லாவின் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்: இந்த வாரம் திறப்பு
இந்தியாவில் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்தும் வகையில் டெஸ்லா நிறுவனம் சென்னையில் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை இந்த வாரம் திறக்க உள்ளது. இது தென்னிந்தியாவில் டெஸ்லாவின் மூன்றாவது மையமாகும்.
சென்னையில் டெஸ்லாவின் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் இந்த வாரம் திறக்கப்பட உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவைப் பரப்பை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக இந்த புதிய மையத்தை சென்னையில் அமைக்கிறது.
ஹைதராபாத் மற்றும் பெங்களூருவைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் டெஸ்லாவின் மூன்றாவது விற்பனை நிலையமாக சென்னை எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் அமைய உள்ளது. இந்திய அளவில் இது டெஸ்லாவின் ஆறாவது விற்பனை நிலையமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் இதுவரை இந்தியாவில் டெஸ்லா 600-க்கும் மேற்பட்ட கார்களை விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 38 டெஸ்லா கார்கள் விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் தொடங்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டில் டெஸ்லாவின் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் அணுகல் மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்திய சந்தையில் டெஸ்லா மாடல் ஒய் பிரீமியம் பின்சக்கர இயக்கம் மற்றும் மாடல் ஒய் எல் அனைத்து சக்கர இயக்கம் ஆகிய இரண்டு வகைகளை வழங்குகிறது.
புதிய சென்னை மையத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் டெஸ்லா கார்களை நேரடியாக பார்வையிடுவதுடன், அவற்றின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற உள்ளனர்.
சென்னையில் டெஸ்லா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறக்கப்படுவது, தமிழ்நாட்டின் மின்சார வாகன சந்தையில் டெஸ்லாவின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Dharshini