லக்னோவை சாய்த்த ராஜஸ்தான்.. பிளே ஆஃப் போட்டியில் மீண்டும் பலம் காட்டிய ராயல்ஸ்!
ஐபிஎல் 2026 தொடரின் 64ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ், புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் நம்பிக்கையை வலுப்படுத்தியது.
ஐபிஎல் 2026 தொடரின் 64ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் போட்டியில் தனது வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் பஞ்சாப் அணி முதல் முறையாக டாப்-4 இடத்திலிருந்து வெளியேறியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் ஜாஷ் இங்லிஸ் ஜோடி அதிரடியான தொடக்கம் கொடுத்தது.
முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில், ஜாஷ் இங்லிஸ் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிகோலஸ் பூரன் 16 ரன்களும், ரிஷப் பந்த் 35 ரன்களும் சேர்த்தனர்.
மிட்செல் மார்ஷ் அபாரமாக விளையாடி 57 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார். அவரது இன்னிங்சில் 11 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் இடம்பெற்றன.
இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்தது.
பின்னர் 221 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி தொடக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 43 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியை தொடர்ந்தார். அவருடன் துருவ் ஜுரெல் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர்.
வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்சில் 7 பவுண்டரிகளும் 10 சிக்ஸர்களும் இடம்பெற்றன.
மறுபுறம் துருவ் ஜுரெல் அமைதியான ஆனால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 53 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். டோனோவன் ஃபெரெய்ரா 16 ரன்களுடன் துணைநின்றார்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உயிர்ப்புடன் தக்கவைத்துள்ளது.
Prasanth Subramani